தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து பிடிக்கப்படும் பி.எப். பணத்தை ஆன்லைனில் திரும்ப பெறும் புதிய வசதியை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (இபிஎப்ஓ) வரும் ஆகஸ்டு மாதம் முதல் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த புதிய வசதியால் சில மணிநேரங்களிலேயே பி.எப். பணத்தை திரும்ப பெற முடியும்.
ஆரக்கிள் ஆபரேட்டிங் சிஸ்டத்தின் வழியாக இந்த புதிய வசதியை வழங்குவதற்காக செகந்திராபாத், கர்கூன், துவாரகா ஆகிய 3 இடங்களில் ஒருங்கிணைந்த டேட்டா சென்டர்களும் அமைக்கப்பட உள்ளன. நாடு முழுவதும் உள்ள 123 இபிஎப்ஓ அலுவலகங்கள் இந்த டேட்டா சென்டர்களுடன் இணைக்கப்படும். இதற்காக, சர்வர்களை நிறுவும் பணி வரும் மே மாதத்திற்குள் முடிக்கப்பட்டு ஜூன் மாதத்தில் சோதனை செய்யப்படும். நன்கு சோதித்து அதில் கிடைக்கும் பலனை பொறுத்து ஆகஸ்டு மாதத்தில் ஆன்லைன் வித்டிரா வசதி அறிமுகப்படுத்தப்படும்.
இந்த புதிய வசதி வந்த பிறகு பி.எப். சந்தாதாரர்கள் தங்கள் பி.எப். பணத்தை திரும்ப பெற ஆன்லைனில் விண்ணப்பித்தால் பி.எப். பணம் நேரடியாக வங்கிக்கணக்கில் டிரான்ஸ்பர் செய்யப்பட்டுவிடும். இதற்கு, சந்தாதாரர்கள் யூ.ஏ.என். நம்பர், பி.எப். கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்கு எண், ஆதார் நம்பர் மற்றும் பான் கணக்கு எண் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும்.
6.15 கோடி சந்தாதாரர்களை கொண்டுள்ள இபிஎப்ஓ பல புதிய தகவல் தொழில்நுட்ப வசதிகளை அறிமுகப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.