Wednesday, February 24, 2016

முதல்வர் பிறந்தநாள் விழா - சாலையில் மேடை; ஆத்திரத்தில் சூறை

Source - Dinamalar
முதல்வர் பிறந்தநாள் விழா
சாலையில் மேடை; ஆத்திரத்தில் சூறை

முதல்வர் பிறந்தநாள் என்ற பெயரில், நேற்று ஆளும்கட்சியினர் நகரின் பல பகுதிகளில் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தினர். வாகன ஓட்டிகள் கடும் அவஸ்தைக்கு ஆளாகினர்.
குரோம்பேட்டையில், ஜி.எஸ்.டி., சாலை, அணுகு சாலையை ஆக்கிரமித்து, அக்கட்சியினர் மேடை அமைத்து நிகழ்ச்சி நடத்தினர். அணுகு சாலையில் மேடையின் முன்பும், பின்பும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மதியம் 3:00 மணி வரை நிகழ்ச்சி நடந்தது. அதிக போக்குவரத்து கொண்ட, அணுகு சாலையை ஆக்கிரமித்து, மேடை அமைத்ததால், அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பெரும் சிரமப்பட்டனர். கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள், வழியின்றி வந்த பாதையில் திரும்பி சென்றன. இருசக்கர வாகனங்கள், மாற்று பாதையாக நியூகாலனி வழியாக சென்றன.
சாலையில் மேடை;
திருவள்ளூர் மேற்கு மாவட்ட சிறுபான்மையினர் மற்றும் ஜெ., பேரவை சார்பில், முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, பூந்தமல்லியில் நடந்தது. பூந்தமல்லி டிரங்க் சாலை ஓரத்தில் மேடை அமைத்து நிகழ்ச்சி நடத்தினர். சைக்கிள், இஸ்திரி பெட்டி, அரிசி உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன. சிலருக்கு மட்டுமே நலத்திட்ட உதவிகளை, அ.தி.மு.க., நிர்வாகிகள் வழங்கினர்.முக்கிய நிர்வாகிகள் சென்ற பின், பொதுமக்களுக்கு சரியான முறையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவில்லை. அதனால், மேடையின் கீழ் இருந்த கூட்டத்தின் ஒரு பகுதியினர் மேடையில் ஏறி, கையில் கிடைத்த பொருட்களை சுருட்டினர்.அதை கண்ட கட்சிநிர்வாகிகள், பொருட்களை எடுத்து சாலையில் வீசினர். அவற்றை எடுக்க சாலையில், பொதுமக்கள் ஒருவருக்கொருவர் முண்டியடித்தனர். அதில், பலர்தவறி கிழே விழுந்து காயமடைந்தனர்.
அம்மனை மறைத்த ஆளும்கட்சியினர்:
திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் நேற்று அதிகாலை, மாசி பிரம்மோற்சவத்தின், நிறைவு விழாவான பந்தம்பறி 18 திருநடனம் நடந்து கொண்டிருந்தது. அதற்காக, வெளியூர்களில் இருந்து நேற்று முன்தினம் இரவே பக்தர்கள் குவிந்தனர். அதிகாலையில் உற்சவம் முடிந்த பின், வடிவுடையம்மனை தரிசிக்க காத்திருந்தனர். அந்த நேரத்தில், திடீரென 30க்கும் மேற்பட்ட ஆளும்கட்சியினர், சிறப்பு தரிசனம் செய்ய 100 ரூபாய் செலுத்தி, வரிசையாக சென்று கருவறை முன்பு அதை மறைத்தவாறு நின்று கொண்டனர். அம்மனை தரிசிக்க முடியாமல், வெளியூர் பக்தர்கள் புலம்பியவாறு சென்றனர்.
பஸ்சில் நடந்த பாதயாத்திரை:
வடசென்னை வடக்கு மாவட்ட அம்மா பேரவை சார்பில், முதல்வர் பிறந்தநாள் விழா, அ.தி.மு.க., அவை தலைவர் மதுசூதனன் தலைமையில் கொண்டாடப்பட்டது. தண்டையார்பேட்டை அங்காளம்மன் கோவிலில் இருந்து, திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் வரை, சிறப்புபாதயாத்திரை நடத்த தீர்மானிக்கப்பட்டது. அதில், 2,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வர் என, அறிவிக்கப்பட்டது. ஆனால், 300க்கும் குறைவான பெண்களே கலந்து கொண்டனர்.உடல் நலக்குறைவால், மதுசூதனன் பாதியில் விலகியதால், பெண்கள் பஸ்சில் ஏறி, திருவொற்றியூருக்கு சென்று விட்டனர். வடிவுடையம்மன் கோவிலை அடையும்போது, பெண்கள் பஸ்சில் இருந்து இறங்கி, பாதயாத்திரையில் ஐக்கியமாகினர்.
நள்ளிரவில் நலத்திட்ட உதவி:
புதுவண்ணாரப்பேட்டை, ஏ.இ.கோவில் தெருவில், வடசென்னை வடக்கு மாவட்ட செயலர் வெற்றிவேல் தலைமையில், பிறந்தநாள் விழா நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு துவங்கியது. வழக்கம் போல, தெருவை மறித்து மேடை அமைக்கப்பட்டது. விழாவில், அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நந்தம் விஸ்வநாதன், பழனியப்பன், கோகுல இந்திரா, வளர்மதி கலந்து கொண்டனர். மிதிவண்டி, ஊனமுற்றோர் சைக்கிள், வீட்டு உபயோக பாத்திரங்கள் உள்ளிட்டவை, அருகில் உள்ள சவுந்திரபாண்டி சுப்பம்மாள் மேல்நிலை பள்ளியில், தனி மேடையில் வைக்கப்பட்டிருந்தன. இரவு, 7:00 மணியளவில் தேவா கச்சேரி நடந்தது. பின், இரவு, 9:30 ணியளவில், அமைச்சர்கள், பத்து பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி விட்டு சென்றனர். விடிய விடிய கலை நிகழ்ச்சிகள் நடந்தன. நள்ளிரவு 12:00 மணியளவில், முதல்வர் பிறந்த நாளை கொண்டாடும் வகையில், மாவட்ட செயலர் வெற்றிவேல், 68 கிலோ கேக்கை வெட்டினார். பின் அதிகாலை 3:00 மணி வரை, விடிய விடிய, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
Source - Dinamalar